"உங்கள் வாக்கு டெல்லியை மிகவும் வளர்ந்த தலைநகராக மாற்றும்" - மத்திய மந்திரி அமித் ஷா

  தினத்தந்தி
உங்கள் வாக்கு டெல்லியை மிகவும் வளர்ந்த தலைநகராக மாற்றும்  மத்திய மந்திரி அமித் ஷா

புதுடெல்லி,70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 பேர் போட்டியில் உள்ளனர். இதில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது. இந்த சூழ்நிலையில் இன்று பலப்பரீட்சை நடக்கிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது.இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது, "டெல்லி சட்டசபை தேர்தலில் வாக்களிக்கப் போகும் எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்கள், பொய்யான வாக்குறுதிகள், மாசுபட்ட யமுனை, மதுபானக் கடைகள், உடைந்த சாலைகள் மற்றும் அழுக்கு நீர் ஆகியவற்றிற்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இன்று, மக்கள் நலனில் வலுவான சாதனை பதிவையும், டெல்லியின் வளர்ச்சிக்கான தெளிவான தொலைநோக்கு பார்வையையும் கொண்ட ஒரு அரசாங்கத்தை அமைக்க அதிக எண்ணிக்கையில் வாக்களியுங்கள். உங்கள் ஒரு வாக்கு டெல்லியை உலகின் மிகவும் வளர்ந்த தலைநகராக மாற்றும்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை