ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக் விவகாரம்: மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரைவில் இறுதி அறிக்கை
சென்னை, சென்னை எழும்பூரில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த தீ விபத்தை சுட்டிக்காட்டிய ஏ.டி.ஜி.பி., கல்பனா நாயக் சப் இன்ஸ்பெக்டர் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்கியதில் முரண்பாடு இருப்பதாக தான் புகார் தெரிவித்ததால் தம்மை கொல்ல சதி நடந்ததாக குற்றம் சாட்டி இருந்தார்.இந்த சூழலில் கல்பனா நாயக்கின் குற்றச்சாட்டுக்கு டிஜிபி அலுவலகம் மறுப்பு தெரிவித்தது. இது தொடர்பாக டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக் அறையில் ஏற்பட்ட தீ விபத்து திட்டமிடப்பட்ட செயல் இல்லை. அலுவலகத்தில் தீ விபத்து நடந்தவுடன் டி.ஜி.பி. அலுவலகத்தில் ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக் புகார் அளித்தார். தீ விபத்து குறித்து எழும்பூர் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. தடயவியல் நிபுணர்கள், தீயணைப்புத்துறை, மின் துறை ஆகியோரிடம் தீ விபத்து தொடர்பாக விளக்கம் பெற்றுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பிலும் கல்பனா நாயக் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக முதலில் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தற்போது இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் விசாரணை முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும், விரைவில் எழும்பூர் கோர்ட்டில் இதுதொடர்பாக இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.