சத்தீஷ்கார்: உளவு கூறுபவர் என்ற சந்தேகத்தில் வாலிபர் படுகொலை; நக்சலைட்டுகள் வெறிச்செயல்

  தினத்தந்தி
சத்தீஷ்கார்: உளவு கூறுபவர் என்ற சந்தேகத்தில் வாலிபர் படுகொலை; நக்சலைட்டுகள் வெறிச்செயல்

தன்டேவாடா,சத்தீஷ்காரின் தன்டேவாடா மாவட்டத்தில் போலீசுக்கு ரகசிய தகவல் அளிப்பவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், 30 வயது இளைஞர் ஒருவரை நக்சலைட்டுகள் அடித்து கொன்றுள்ளனர்.அடையாளம் தெரியாத நக்சலைட்டுகள் சிலர் நேற்றிரவு ஆரன்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காகதி கிராமத்தில் உள்ள ஹத்மா எம்லா என்பவரின் வீட்டுக்குள் புகுந்து அவரை கடத்தி அருகேயுள்ள காட்டுக்குள் கொண்டு சென்றனர்.இதன்பின்னர், அவரை போலீசுக்கு ரகசிய தகவல் அளிப்பவர் என கூறி அவரை படுகொலை செய்து, கிராமத்திற்கு அருகே உடலை வீசி விட்டு சென்றனர். இதுபற்றிய தகவல் இன்று காலை போலீசாருக்கு தெரிய வந்தது. அவர்கள் எம்லாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.2 நாட்களுக்கு முன், பிஜாப்பூர் மாவட்டத்தில் முன்னாள் நக்சலைட்டு ஒருவர் உள்பட 2 பேர் நக்சலைட்டுகளால் கொலை செய்யப்பட்டனர். இதேபோன்று ஜனவரி 26-ந்தேதி பைரம்கார் பகுதியை சேர்ந்த 41 வயது நபர், போலீசுக்கு தகவல் அளிப்பவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டார்.இதே காரணத்திற்காக, ஜனவரி 16-ந்தேதி மிர்துர் பகுதியை சேர்ந்த 48 வயது நபர் ஒருவர் நக்சலைட்டுகளால் படுகொலை செய்யப்பட்டார். பிஜாப்பூர் உள்பட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தார் பகுதியில் நக்சலைட்டு வன்முறை தொடர்புடைய வெவ்வேறு சம்பவங்களில் கடந்த ஆண்டு 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.

மூலக்கதை