டெல்லி முதல்-மந்திரி யார்..? நாளை மறுநாள் பதவியேற்பு விழா

புதுடெல்லி, டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டசபை தொகுதிகளில் பா.ஜ.க. 48 இடங்களை கைப்பற்றியது. ஆம் ஆத்மி கட்சிக்கு 22 இடங்கள் கிடைத்தன. டெல்லியில் பெரும்பான்மைக்கு தேவை 36 இடங்கள். இதனால் டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பின்னர் பா.ஜ.க. ஆட்சி அமைக்க உள்ளது. அதேநேரத்தில் டெல்லியின் புதிய முதல்-மந்திரி யார் என்பதை ஒரு வாரமாக தீர்மானிக்க முடியாமலும் தேர்ந்தெடுக்க முடியாமலும் பா.ஜ.க. மேலிடம் திணறி வருகிறது. டெல்லி முதல்-மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரிகளின் மகன்கள், பெண் எம்.எல்.ஏக்கள் என பலரும் முட்டி மோதுகின்றனர். இவர்களில் யாரை தேர்ந்தெடுத்தாலும் மற்றொரு தரப்பு அதிருப்தியை வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனிடையே பிரதமர் மோடியின் அமெரிக்கா பயணம் முடிவடைந்த பின்னர் புதிய முதல்-மந்திரி மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழா இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக ஒரு பார்வையாளர் குழுவையும் பா.ஜ.க. மேலிடம் அமைத்திருந்தது. இந்த மேலிடப் பார்வையாளர் குழுவினர் 48 எம்.எல்.ஏக்களையும் அழைத்து பேசி அவர்களது கருத்துகளை கேட்டு வருகிறது.இந்நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி பாரதிய ஜனதா கட்சி சட்டசபை உறுப்பினர்கள் நாளை (திங்கள்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு டெல்லி பா.ஜ.க. மாநில அலுவலகத்தில் கூடி முதல்-மந்திரி வேட்பாளரை முடிவு செய்ய உள்ளனர். இதுகுறித்து அனைத்து பா.ஜ.க. சட்டசபை உறுப்பினர்களுக்கும் கூட்டம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்குப் பிறகு புதிய முதல்-மந்திரி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை தேர்தலுக்கு முன்பு கட்சி முதல்-மந்திரி வேட்பாளரை பா.ஜ.க. அறிவிக்கவில்லை. தற்போதைய டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் 23-ம் தேதியுடன் முடிவடைவதால், அதற்கு முன்னர் பதவியேற்பு விழா நடைபெறலாம் என்று கூறப்பட்டது.இந்நிலையில் டெல்லி முதல்-மந்திரி பதவியேற்பு விழா நாளை மறுநாள் (பிப்.. 18-ம் தேதி) ராம்லீலா மைதானத்தில் நடைபெறலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
மூலக்கதை
