டெல்லி சம்பவம் எதிரொலி: லக்னோ ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

  தினத்தந்தி
டெல்லி சம்பவம் எதிரொலி: லக்னோ ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

லக்னோ, உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கி, மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்வில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவு டெல்லி ரெயில்வே நிலையத்தில் அதிகளவில் பயணிகள் திரண்டிருந்தனர். இந்த சூழலில், அவர்கள் பயணிக்க வேண்டிய ரெயில் வேறொரு தண்டவாளத்தில் வந்தால் பயணிகள் முந்திக்கொண்டு ரெயிலில் ஏற முயன்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பெண்கள் உட்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். புதுடெல்லி ரெயில் நிலைய சம்பவத்தைத் தொடர்ந்து லக்னோ ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக லக்னோ ரெயில்வே ஏ.டி.ஜி. பிரகாஷ் கூறுகையில், "பொதுமக்கள் வழங்கப்படும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்... எந்த விதமான தள்ளுமுள்ளுகளையும் செய்ய வேண்டாம். போதுமான ரெயில்களும் அனைத்து மக்களுக்கும் இடமும் உள்ளது. பிரயாக்ராஜ் நோக்கி செல்லும் அனைத்து ரெயில்களையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். மேலும் எங்களிடம் உள்ள அனைத்து தொழில்நுட்பத்தையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். போதுமான ஏற்பாடு உள்ளது. எந்த விதமான பிரச்சனையும் இங்கு இல்லை. இங்கே எங்களிடம் ஜிஆர்பிஎப் குழு உள்ளது, அதைத் தவிர ஆர்பிஎப் உள்ளது, அதனுடன் ஒரு வெடிகுண்டு செயலிழப்புப் படை, பெண்கள் படை உள்ளது. பொதுமக்கள் எங்களுடன் ஒத்துழைக்குமாறு நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறோம். இந்த வழி தடத்தில் நாங்கள் இங்கே சிசிடிவி கேமராக்களை அதிகமாக நிறுவுவோம்" என்று அவர் கூறினார். இதனிடையே புதுடெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு இனி வரும் நாட்களில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க வடக்கு ரெயில்வே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்படி பிரயாக்ராஜ் நோக்கிச் செல்லும் அனைத்து சிறப்பு ரெயில்களும் 16வது பிளாட்பாரத்தில் இருந்து இயக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பிரயாக்ராஜ் செல்ல விரும்பும் அனைத்து பயணிகளும் புதுடெல்லி ரெயில் நிலையத்தின் அஜ்மேரி கேட் பக்கத்திலிருந்து வந்து செல்ல வேண்டும். வழக்கமான ரெயில்கள் வழக்கம் போல் அனைத்து பிளாட்பாரங்களிலிருந்தும் தொடர்ந்து இயக்கப்படும். ஒரே பிளாட்பாரத்தில் மக்கள் குவிவதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

மூலக்கதை