இந்திய சமூகத்தை வடிவமைப்பதில் இந்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் - மோகன் பகவத்

கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம் பர்பா பர்தமான் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-"சங்பரிவார் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கான பதில், ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே ஆகும். இந்து சமூகத்தை ஏன் ஒன்றிணைக்க வேண்டும்? ஏனென்றால் இந்திய சமூகத்தை வடிவமைப்பதில் இந்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.இந்தியா என்பது நிலப்பரப்பு மட்டுமல்ல. இந்தியாவிற்கு இயற்கையாகவே ஒரு மனோபாவம் உள்ளது. அந்த இயற்கையான மனோபாவத்துடன் தங்களால் வாழ முடியாது என்று நினைத்தவர்கள் தங்களுக்கென தனி நாட்டை உருவாக்கிக் கொண்டனர். தனியாக பிரிந்து செல்ல விரும்பாதவர்கள், இந்தியாவின் மனோபாவத்தை ஏற்றுக்கொண்டனர். அந்த மனோபாவம் என்பது 1947-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ந்தேதி உருவானது அல்ல. மாறாக பண்டைய காலத்திலேயே அது உருவானது. இந்துக்கள் உலகத்தின் பன்முகத்தன்மையை எப்போதும் ஏற்றுக்கொண்டவர்கள் என்பதை உலகம் உணரத் தொடங்கியுள்ளது. ஒற்றுமை என்பது பன்முகத்தன்மையில் இருந்துதான் வரும் என்பதை இந்துக்கள் உணர்ந்துள்ளனர்."இவ்வாறு மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மூலக்கதை
