சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் ஒருதலை பட்சமாக செல்லும் - ஹர்பஜன் கணிப்பு

மும்பை, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.இதில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டம் இப்போதே ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சினை காரணமாக இரு அணிகளும் நேரடி போட்டிகளில் விளையாடுவதில்லை. ஐ.சி.சி. மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. இதன் காரணமாக இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் இந்தியாவை எப்படியாவது பாகிஸ்தான் வீழ்த்த வேண்டும் என்பதே அந்நாட்டு ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.இந்நிலையில் இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்திய அணி ஒருதலைபட்சமாக வெல்லும் என்று ஹர்பஜன் கணித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "இரண்டு நாடுகளும் (இந்தியா - பாகிஸ்தான்) விளையாடும் போட்டி குறித்து நீங்கள் கேட்கிறீர்கள். இந்த போட்டியை எடுத்துக் கொண்டால் இந்திய அணி மிகவும் பலமான அணியாக இருக்கிறது. அதே சமயத்தில் பாகிஸ்தான் அணி சொந்த நாட்டில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்து முத்தரப்பு தொடரை இழந்திருக்கிறது. மேலும் புள்ளி விபரங்களை எடுத்து வைத்து பார்க்கும் பொழுது அதில் தெளிவாக இந்திய அணி மேலே இருக்கிறது. கிரிக்கெட்டை பொருத்தவரையில் எதிர்காலத்தில் குறிப்பிட்ட நாளில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது என்பதும் உண்மைதான். ஆனால் வெளிப்படையாகவே இந்திய அணி பாகிஸ்தானை விட பெரிய அணியாக இருக்கிறது. அவர்களுக்கு பாபர் மற்றும் ரிஸ்வான் தவிர வேறு யாரும் இல்லை. ரிஸ்வான் கேப்டன்சி நன்றாக இருக்கிறது. மேலும் அவருடைய எண்ணங்களும் நன்றாக இருக்கிறது. ஆனால் மற்றவர்களிடமிருந்து அவருக்கு தேவையான ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. சல்மான் முத்தரப்பு தொடரில் சதம் அடித்திருக்கிறார். மற்றபடி அவர்களுடைய முன்னாள் வீரர்களிடம் கேட்டாலே இந்திய அணி கொஞ்சம் மேலே இருப்பதை கூறுவார்கள். எனவே எல்லா அடிப்படையில் இந்திய அணி முன்னால் இருக்கிறது. மேலும் மிகைப்படுத்தப்பட்ட இந்த போட்டியில் இந்திய அணி ஒருதலைபட்சமாக பாகிஸ்தானை வெல்லும். மேலும் டிக்கெட்டுகள் மிக அதிகமான விலைக்கு விற்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் நீங்கள் நினைப்பது போல இந்த போட்டி மிகப்பெரிய பரபரப்பாக ஒன்றும் இருக்காது"என்று கூறினார்.
மூலக்கதை
