தமிழ்நாடு அறிவுநகரம் திட்டத்தை மொத்தமாக வேறு நகருக்கு மாற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னை,பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,சென்னையை அடுத்த திருவள்ளூர், ஊத்துக்கோட்டை வட்டங்களில் 1703 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அறிவு நகரம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு நிலங்களை கையகப்படுத்த கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, இப்போது அறிவுநகரம் அமைக்கப்படும் நிலப்பரப்பு 870 ஏக்கராக குறைக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது திருவள்ளூர் மாவட்ட உழவர்களுக்கு சற்று நிம்மதியளிக்கும் விஷயம் தான் என்றாலும் முழுமையான வெற்றி அல்ல.மொத்தம் 1703 ஏக்கர் நிலப்பரப்பில் அறிவுசார் நகரம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதற்காக ஊத்துகோட்டை வட்டத்திலுள்ள கல்பட்டு, ஏனம்பாக்கம், மேல் மாளிகைப்பட்டு, செங்கத்தாக்குளம், எர்ணாங்குப்பம், திருவள்ளூர் வட்டத்திலுள்ள வெங்கல் ஆகிய கிராமங்களில் நில எடுப்பு செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. அப்பகுதியில் 556 ஏக்கர் அரசு புறப்போக்கு நிலங்கள் இருக்கும் நிலையில், அதையும், உழவர்களுக்கு சொந்தமான 1146 ஏக்கர் நன்செய் மற்றும் புன்செய் நிலங்களையும் கையகப்படுத்த அரசு தீர்மானித்தது.தமிழக அரசின் முடிவுக்கு கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதமே நான் கடும் கண்டனம் தெரிவித்தேன். இந்தத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அந்தப் பகுதியில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து அறிவு நகரம் அமைப்பதற்கான நிலப்பரப்பை 1703 ஏக்கரில் இருந்து 1424 ஏக்கராக தமிழக அரசு குறைத்தது. இப்போது அப்பரப்பை 870 ஏக்கராகக் குறைத்திருக்கிறது. இது மண்ணைக் காப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி ஆகும்.அறிவுநகரம் 870 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தமிழக அரசுக்கு சொந்தமான 556 புறம்போக்கு நிலங்களுடன் உழவர்களுக்கு சொந்தமான 314 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படுமா? அல்லது மொத்தமாகவே உழவர்களின் நிலங்கள் மட்டும் தான் கையகப்படுத்தப்படுமா? என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. எப்படியாக இருந்தாலும் உழவர்களின் விளைநிலங்களில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணைக் கூட எடுக்க பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. நிலம் எடுக்கும் முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டால் அதைக் கண்டித்து பா.ம.க. பெரும் போராட்டத்தை நடத்தும்.தமிழ்நாடு அறிவு நகரம் அமைப்பதையும், அங்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் வளாகங்களை ஏற்படுத்துவதையும் பாட்டாளி மக்கள் கட்சி எப்போதும் ஆதரிக்கிறது. அதற்காக ஆரணி ஆற்றங்கரையில் மூன்று போகங்களும் சிறப்பாக விளையக்கூடிய, ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டித்தரக்கூடிய நிலங்களை ஏக்கருக்கு ரூ.15 லட்சம் என்ற அடிமாட்டு விலைக்கு அரசு பிடுங்க நினைப்பதை பா.ம.க அனுமதிக்காது. எந்த ஒரு திட்டத்திற்காகவும் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.தமிழக அரசு விரும்பினால், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 556 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் அறிவு நகரத்தை அமைக்கலாம். அது சாத்தியமில்லை என்றால், திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவுநகரம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். அதற்கு மாற்றாக சேலம் நகரத்திற்குட்பட்ட பகுதிகளில் சேலம் இரும்பாலைக்கு சொந்தமான 4000 ஏக்கர் நிலத்திலோ, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட கொங்குபகுதிகளில் அரசுக்கு சொந்தமாக உள்ள நிலங்களிலோ இந்தத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூலக்கதை
