த.வெ.க. தலைவர் விஜய்யின் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்? எச். ராஜா கேள்வி

கோவை,தமிழக அரசு, மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் கல்வி நிதி தர முடியாது என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பேசியது சர்ச்சையானது. இதற்கு, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதேபோன்று பல்வேறு அமைச்சர்களும், அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.இந்நிலையில், த.வெ.க. தலைவர் விஜய்யும் தனது கண்டன பதிவை வெளியிட்டார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பா.ஜ.க. மூத்த தலைவரான முன்னாள் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, நான் தெலுங்கானா கவர்னராக இருந்தபோது விஜய்யின் படங்கள் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியானது.பல மொழிக்கொள்கை உங்கள் வியாபாரத்திற்கு இருக்கலாம். ஆனால் குழந்தைகளின் அறிவாற்றலுக்கு இருக்க கூடாதா? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அவர், தமிழில் மட்டும்தான் என் படம் வெளியாகும் என்று நீங்கள் கூறினீர்களா? நான் தமிழன். தமிழை போற்றுபவன். அதனால் தெலுங்கில் படம் வெளியானால் நான் எதிர்ப்பேன் என நீங்கள் சொல்லவில்லையே.. என கூறியுள்ளார்.இந்நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர் எச். ராஜா கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போது, த.வெ.க. தலைவர் விஜய்யின் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்? இருமொழி கொள்கையிலா?, சமச்சீர் கல்வியிலா? என பதில் கூறுங்கள்.வெளிநாட்டில் எந்த இடத்தில் விஜய்யின் குழந்தைகள் படித்தாலும், அவர்களை அரசு பள்ளியில் கொண்டு வந்து சேருங்கள் என கூறியுள்ளார். இதேபோன்று, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோரும் இதேபோன்று செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.மும்மொழி கொள்கையை எதிர்க்கும் விஜய் போன்ற அனைத்து அரசியல்வாதிகளும் உங்கள் பிள்ளைகள் எங்கு படித்தாலும் அங்கிருந்து நிறுத்தி அரசு பள்ளியில் சேர்க்க தயாரா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மூலக்கதை
