பாபர், விராட் இல்லை.. உலகின் சிறந்த பேட்ஸ்மேன் அவர்தான் - பாக்.முன்னாள் வீரர்

மும்பை,இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.இதில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டம் இப்போதே ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சினை காரணமாக இரு அணிகளும் நேரடி போட்டிகளில் விளையாடுவதில்லை. ஐ.சி.சி. மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. இதன் காரணமாக இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் இந்தியாவை எப்படியாவது பாகிஸ்தான் வீழ்த்த வேண்டும் என்பதே அந்நாட்டு ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.இந்த போட்டி குறித்தும் இரு நாட்டு வீரர்களின் செயல்பாடுகள் குறித்தும் பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் பாகிஸ்தான் முன்னாள் வீரரான அப்துர் ரவூப், இந்தியாவின் விராட், ரோகித் மற்றும் பாகிஸ்தானின் பாபர் அசாமை ஒப்பிட்டு சில கருத்துகளை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இருவரும் (பாபர் அசாம் மற்றும் விராட்கோலி) சிறந்த வீரர்கள். ஆனால் என் கருத்துப்படி விராட் கோலியை யாருடனும் ஒப்பிட முடியாது. அவரது தரம், நிலைத்தன்மை மற்றும் அழுத்தத்தின் கீழ் சிறப்பாக செயல்படும் திறன் ஆகியவை அவரை வேறுபடுத்துகின்றன. பாபர் அசாம், பார்மில் இருக்கும்போது, அபாமாக செயல்படுகிறார். ஆனால் தனிப்பட்ட முறையில், எனக்குப் பிடித்த பேட்ஸ்மேன் ரோகித் சர்மா. தற்போது உலக கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன் ரோகித் சர்மாதான் என்று நான் நம்புகிறேன். விராட் மற்றும் பாபரை விட அவர் மிகவும் சிறந்தவர், "என்று கூறினார்.
மூலக்கதை
