ஸ்கைவர் - பிரண்ட் அபாரம்: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

வதோதரா,5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) தொடர் குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் - மும்பை அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி ஆரம்பம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணியில் ஹர்லீன் தியோல் (31 ரன்கள்), காஷ்வி கவுதம் (20 ரன்கள்) தவிர மற்ற வீராங்கனைகள் விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். மற்ற முன்னணி வீராங்கனைகள் ஆன பெத் மூனி 1 ரன்னிலும், லாரா வோல்வார்ட் 4 ரன்களிலும், கேப்டன் ஆஷ்லே கார்ட்னெர் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய குஜராத் அணி 10 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் அடித்தது. கடைசி பந்தில் பிரியா மிஸ்ரா ரன் அவுட் ஆனார். அபாரமாக பந்து வீசிய மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஹேய்லி மேத்யூஸ் 3 விக்கெட்டுகளும், நாட் ஸ்கைவர் - பிரண்ட் மற்றும் அமெலியா கெர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 121 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் சார்பில் ஹேய்லி மேத்யூஸ் மற்றும் யாஷிகா பாட்டியா ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக துவங்கிய இந்த ஜோடியில் மேத்யூஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து பாட்டியா 8 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பீரித் கவுர் 4 ரன்களும், அமெலியா கெர் 19 ர்னகளும் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நாட் ஸ்கைவர் - பிரண்ட் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 57 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். இறுதியில் சஜீவன் சஜனா 10 ரன்களும், கமலினி 4 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் மும்பை அணி 16.1 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் சார்பில் காஷ்வீ கவுதம் மற்றும் பிரியா மிஸ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், தனுஜா கென்வர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.
மூலக்கதை
