ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர்: நாளை தொடக்கம்.. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து மோதல்

கராச்சி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. இதில் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தரவரிசையில் டாப்-8 இடங்களை பிடித்த அணிகள் மட்டுமே தகுதி பெற்றுள்ளன. அந்த வகையில் முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இந்த முறை தகுதி பெறவில்லை.இதில் களம் காணும் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்த தொடரில் நாளை (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
மூலக்கதை
