3-வது ஒருநாள் போட்டி: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஜிம்பாப்வே

  தினத்தந்தி
3வது ஒருநாள் போட்டி: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஜிம்பாப்வே

ஹராரே, அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பால்பிர்னி 64 ரன்கள் அடித்தார். இதனையடுத்து 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன பிரையன் பென்னட், பென் கர்ரண் சிறப்பாக விளையாடி வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இவர்களில் பென்னட் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கிரெய்க் எர்வினும் சிறப்பாக விளையாட ஜிம்பாப்வே எளிதில் வெற்றி பெற்றது. வெறும் 39.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த ஜிம்பாப்வே 246 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. பென் கர்ரண் 118 ரன்களுடனும், கிரெய்க் எர்வின் 69 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஜிம்பாப்வே 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. பென் கர்ரண் ஆட்ட நாயகனாகவும், பிரையன் பென்னட் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

மூலக்கதை