தமிழக அணியால் ரஞ்சி கோப்பையை ஏன் வெல்ல முடியவில்லை..? இந்திய முன்னாள் வீரர் விளக்கம்

  தினத்தந்தி
தமிழக அணியால் ரஞ்சி கோப்பையை ஏன் வெல்ல முடியவில்லை..? இந்திய முன்னாள் வீரர் விளக்கம்

மும்பை, 90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்குகிறது. 32 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரில் லீக் மற்றும் காலிறுதி சுற்று ஆட்டங்களின் முடிவில் குஜராத், கேரளா, விதர்பா மற்றும் மும்பை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இதில் முன்னாள் சாம்பியனான தமிழக அணி இந்த முறை காலிறுதி சுற்றோடு வெளியேறியது. தமிழக அணி கடைசியாக 1988-ம் ஆண்டு ரஞ்சி கோப்பையை வென்றது. அதன்பின் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. இந்நிலையில் தமிழக அணி ரஞ்சி கோப்பையை வெல்ல முடியாமல் தவிப்பது எதனால் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சில கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "தமிழக அணியை சேர்ந்த வீரர்கள் பெரும்பாலும் திறமையான வீரர்களாக இருந்தும் அவர்களின் மனோபாவம் போட்டியை வெல்லும் அளவிற்கு இல்லாமல் இருக்கிறது. பள்ளி, கல்லூரி போன்ற போட்டிகளில் இருந்து வீரர்கள் வளர்ந்து வரும் வேளையில் கோப்பையை வெல்ல வேண்டிய உத்வேகத்துடன் பயணிக்க வேண்டும். ரஞ்சியில் தமிழக அணி தடுமாறினாலும் ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வரும் வீரர்கள் மிகச்சிறப்பாக விளையாடி ஐந்து முறை கோப்பையை வென்றிருக்கிறார்கள்.தோனியின் தலைமையிலான சென்னை அணி இப்படி கோப்பையில் வெல்ல அவர்களது திடமான மனோபாவமே காரணம். அந்த வகையில் தமிழக அணிக்காக விளையாடும் வீரர்களும் கோப்பையை வெல்லும் மனோபாவத்தை வளர்த்துக்கொண்டு உறுதியுடன் போராடினால் நிச்சயம் ரஞ்சி டிராபி தொடரையும் கைப்பற்ற முடியும். இந்த ஆண்டு ரஞ்சி தொடரில் லட்சுமிபதி பாலாஜி பயிற்சியாளராக இருந்தார். நட்சத்திர வீரர்களை பயிற்சியாளராக கொண்டு வந்தால் சாம்பியன் பட்டத்தை வென்றுவிட முடியும் என்று நான் கேள்விப்படவில்லை. முதலில் கோப்பையை வெல்லும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்.

மூலக்கதை