சாம்பியன்ஸ் டிராபி: விராட், ரோகித் இல்லை.... அசத்தப்போகும் 2 வீரர்கள் இவர்கள்தான் - தவான்

  தினத்தந்தி
சாம்பியன்ஸ் டிராபி: விராட், ரோகித் இல்லை.... அசத்தப்போகும் 2 வீரர்கள் இவர்கள்தான்  தவான்

மும்பை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. இதில் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தரவரிசையில் டாப்-8 இடங்களை பிடித்த அணிகள் மட்டுமே தகுதி பெற்றுள்ளன. அந்த வகையில் முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இந்த முறை தகுதி பெறவில்லை.இதில் களம் காணும் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். நாளை (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.இந்த தொடரில் கோப்பையை வெல்லும் அணி எது? என்பது குறித்தும் இந்த தொடரில் அசத்தப்போகும் வீரர்கள் யார்? என்பது குறித்தும் பல முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்பினை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான ஷிகர் தவான் எதிர்வரும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி வெல்லும் என்றும் அதில் இரண்டு முக்கிய வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்றும் தனது கணிப்பினை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "சாம்பியன்ஸ் டிராபி தொடரை பொருத்தவரை 2017-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது மீண்டும் நடைபெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. 2013-ம் ஆண்டு நான் முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடி இருந்தேன். அப்போது இருந்து இப்போது வரை அந்த தொடரை நினைத்தாலே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த தொடரை பொறுத்தவரை யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கணிக்க முடியாது. இருந்தாலும் இந்தியாவை தாண்டி என்னால் வெற்றியாளரை யோசிக்க முடியாது. இந்திய அணியின் மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. தற்போதுள்ள இந்திய வீரர்கள் மிகச்சிறப்பான திறமைசாலிகள். இந்திய அணியில் அனுபவ வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் கலவையில் உள்ளனர். பும்ரா இந்த தொடரில் இருந்து வெளியேறியது நமக்கு இழப்பாக இருந்தாலும் ஹர்ஷித் ராணா அவரது இடத்தில் விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் அவர் ரன்களுக்கு சென்றாலும் அவர் பந்துவீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் பந்துவீசி வருகிறார்.அதேபோன்று சுப்மன் கில்லும் ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துகிறார். அவராலும் மிகப்பெரிய தாக்கத்தை இந்த தொடரில் ஏற்படுத்த முடியும். என்னை பொறுத்தவரை இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஹர்ஷித் ராணா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள்" என்று கூறினார்.

மூலக்கதை