ரஞ்சி கோப்பை அரையிறுதி: சூர்யகுமார், ஷிவம் துபே டக் அவுட்.. முதல் இன்னிங்சில் மும்பை தடுமாற்றம்

  தினத்தந்தி
ரஞ்சி கோப்பை அரையிறுதி: சூர்யகுமார், ஷிவம் துபே டக் அவுட்.. முதல் இன்னிங்சில் மும்பை தடுமாற்றம்

நாக்பூர், ரஞ்சி கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் மும்பை- விதர்பா அணிகள் இடையிலான அரையிறுதி ஆட்டம் நாக்பூரில் நேற்று தொடங்கியது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த விதர்பா அணியில் தொடக்க வீரர் அதர்வா டெய்ட் 4 ரன்னில் நடையை கட்டினார். என்றாலும் அடுத்து வந்த வீரர்கள் ஓரளவு நிலைத்து நின்று ஆடினர். துருவ் ஷோரே 74 ரன்களும், கருண் நாயர் 45 ரன்களும், டேனிஷ் மலிவார் 79 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் ஆட்ட நேரம் முடிவில் விதர்பா அணி முதல் இன்னிங்சில் 88 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 308 ரன்கள் அடித்திருந்தது. யாஷ் ரதோட் 47 ரன்னுடனும், கேப்டன் அக்ஷய் வாத்கர் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். மும்பை தரப்பில் ஷம்ஸ் முலானி, ஷிவம் துபே தலா 2 விக்கெட் வீழ்த்தியிருந்தனர்.இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த விதர்பா எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் விரைவில் இழந்தது. விதர்பா முதல் இன்னிங்சில் 383 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. யாஷ் ரதோட் 54 ரன்களிலும், அக்ஷய் வாத்கர் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மும்பை தரப்பில் ஷிவம் துபே 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் ஆன ஆகாஷ் ஆனந்த் நிலைத்து விளையாட மறுமுனையில் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் இழந்த வண்ணம் இருந்தது. முன்னணி வீரர்களான ரகானே 18 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் துபே இருவரும் டக் அவுட் ஆனதும் மும்பை அணிக்கு பின்னடைவை கொடுத்தது. 2-வது நாள் ஆட்ட முடிவில் மும்பை 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களுடன் தடுமாறி வருகிறது. ஆகாஷ் ஆனந்த் 67 ரன்களுடனும், தனுஷ் கோட்டியான் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஷர்துல் தாகூர் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். விதர்பா தரப்பில் பார்த் ரேகாடே 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகின்ற மற்றொரு அரையிறுதியில் குஜராத் - கேரளா விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சை தொடங்கிய கேரளா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ள கேரளா 418 ரன்கள் குவித்துள்ளது. முகமது அசாருதீன் 149 ரன்களுடனும், ஆதித்ய சர்வதே 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

மூலக்கதை