5 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியை விடுவித்த மத்திய அரசு: தமிழகம் மீண்டும் புறக்கணிப்பு

புதுடெல்லி, 2024-25 ஆண்டுக்கான தேசிய பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள், புயல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ரூ.1554.99 கோடி கூடுதல் தொகையை வழங்க மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.மொத்த தொகையான ரூ.1554.99 கோடியில் ஆந்திராவுக்கு ரூ.608.08 கோடி, நாகாலாந்திற்கு ரூ.170.99 கோடி, ஒடிசாவிற்கு ரூ.255.24 கோடி,தெலுங்கானாவிற்கு ரூ.231.75 கோடி மற்றும் திரிபுராவிற்கு ரூ.288.93 கோடி ஆகியவை அனுமதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே 27 மாநிலங்களுக்கு ரூ.18,322.80 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியிள்ளார். முன்னதாக, பெஞ்சல் புயல் நிவாரணமாக ரூ.37 ஆயிரம் கோடி நிதி கோரியிருந்தது தமிழ்நாடு அரசு. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தற்காலிக நிவாரணமாக ரூ.7,033 கோடி தமிழ்நாடு அரசு கோரியிருந்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடி கோரியிருந்தது. இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. இந்த முறையும் தமிழகம் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெஞ்சல் புயல் பாதிப்புக்காக பேரிடர் நிதி வழங்க கோரிக்கை வைத்தும், தமிழ்நாட்டுக்கு கேட்ட நிதி ஒதுக்கப்படவில்லை.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15 மாநிலங்களுக்கு பேரிடர் நிதியாக மொத்தம் ரூ.1115 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இதில் தமிழகத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூலக்கதை
