மேற்கு வங்காளம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை, 3 பேர் கார் விபத்தில் படுகாயம்

கொல்கத்தா,மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள தாங்க்ரா பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 3-வது தளத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் கைகளை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே, அதே குடும்பத்தை சேர்ந்த 3 ஆண்கள் கொல்கத்தாவின் அபிஷிக்தா பகுதி அருகே காரில் சென்றுகொண்டிருந்தபோது, அந்த கார் அங்குள்ள மெட்டோ பாலத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், காரில் சென்று கொண்டிருந்த 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அங்கிருந்த பொதுமக்கள் கூறுகையில், விபத்தில் சிக்கிய கார் வேறு எந்த வாகனத்தின் மீதும் மோதாமல், நேராக மெட்ரோ பாலத்தின் தூண் மீது சென்று மோதியதாக தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மற்ற 3 பேர் கார் விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் தற்செயலாக நடந்ததா? அல்லது அனைவரும் சேர்ந்து தற்கொலைக்கு முயன்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலக்கதை
