போப் பிரான்சிஸ் நுரையீரலில் நிமோனியா பாதிப்பு - வாடிகன் தகவல்

  தினத்தந்தி
போப் பிரான்சிஸ் நுரையீரலில் நிமோனியா பாதிப்பு  வாடிகன் தகவல்

ரோம்,கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 88 வயது போப் பிரான்சிஸ், மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த வாரம் வியாழக்கிழமை உடல்நல பாதிப்பு ஏற்பட்டு ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.முதற்கட்ட பரிசோதனைகளில் அவருக்கு சுவாசக்குழாய் தொற்று மற்றும் லேசான காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போப்புக்கு சுவாச தொற்று அதிகரித்து காணப்படுவதால், அவருக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், போப் பிரான்சிஸ் நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வாடிகன் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ், நேற்று இரவு நன்றாக தூங்கினார் என்றும், மருத்துவ சிகிச்சைக்கு இடையே இன்று காலை உணவு எடுத்துக் கொண்ட அவர், செய்தித்தாள்களை வாசித்தார் என்றும் வாடிகன் செய்தி தொடர்பாளர் மேட்டியோ புரூனி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை