பட்டியலின சமூகத்தவரை எதிர்க்கட்சி தலைவராக்குங்கள்: கெஜ்ரிவாலுக்கு சுவாதி மாலிவால் கடிதம்

புதுடெல்லி,70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவு கடந்த 8ம் தேதி வெளியானது. இதில் 48 இடங்களில் அமோக வெற்றி பெற்று, 27 ஆண்டு களுக்குப் பிறகு மீண்டும் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது. ஆம் ஆத்மி 22 இடங்களை மட்டுமே பிடித்தது. முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்தார். கடந்த 2 முறை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கட்டிலில் இருந்த ஆம் ஆத்மி கட்சி, தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் பெரும் பின்னடைவை சந்தித்தது.இந்நிலையில், ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "டெல்லி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தங்கள் உடல்நலம் மற்றும் மன அமைதியின் மீது கவனம் செலுத்துங்கள். 2022-ம் ஆண்டு பஞ்சாப் தேர்தலின் போது, வெற்றி பெற்று பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஒருவரை துணை முதல்-மந்திரியாக்குவோம் என்று நீங்கள் வாக்குறுதி அளித்தது நினைவிருக்கலாம், ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாதது மிகவும் வருத்தமளிக்கிறது.தற்போது, டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்கும் நேரம் வந்துள்ள நிலையில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரை டெல்லி எதிர்க்கட்சி தலைவராக நியமிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பட்டியலின சமூகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.வை எதிர்க்கட்சி தலைவராக்குவது வெறும் அரசியல் முடிவாக இருக்காது, ஆனால் அது நமது அடிப்படைக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கான வலுவான நடவடிக்கையாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.மேலும் இந்த முறை கெஜ்ரிவால் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரை டெல்லி எதிர்க்கட்சி தலைவராக ஆக்குவதன் மூலம் அம்பேத்கருக்கு உண்மையான அஞ்சலி செலுத்துவார் என்று நம்புகிறேன் என சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.
மூலக்கதை
