பாலஸ்தீன மக்களை காசாவில் இருந்து வெளியேற்றும் முயற்சியை நிராகரித்தது ஐக்கிய அரபு அமீரகம்

  தினத்தந்தி
பாலஸ்தீன மக்களை காசாவில் இருந்து வெளியேற்றும் முயற்சியை நிராகரித்தது ஐக்கிய அரபு அமீரகம்

அபுதாபி,அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தின் செனட் உறுப்பினராக இருந்த மார்கோ ரூபியோ கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தால் வெளியுறவு மந்திரியாக நியமனம் செய்யப்பட்டார். இவர் அமெரிக்க வெளியுறவு கொள்கையை வழிநடத்துவதில் முக்கிய நபராக இருப்பார் என கூறப்பட்டது.குறிப்பாக ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பிரதேசங்களில் அமைதியை கொண்டு வருவதற்கான உலகளாவிய முயற்சியை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பார் என பல தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதியை கைப்பற்றி அதன் மக்களை வெளியேற்றும் முடிவை அமெரிக்கா முன்மொழிந்தது.அந்த அறிவிப்பினை தொடர்ந்து அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ கடந்த சில நாட்களாக மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதில் ஒரு பகுதியாக அமீரகத்துக்கு நேற்று அவர் வருகை புரிந்தார். அபுதாபி ஜாயித் சர்வதேச விமான நிலையத்தின் ஜனாதிபதி முனையத்தில் தனி விமானத்தில் அவர் வந்தார். மார்கோ ரூபியோவை அமீரக சர்வதேச ஒத்துழைப்புக்கான ராஜாங்க மந்திரி ரீம் அல் ஹாஷெமி நேரில் சென்று வரவேற்பு அளித்தார்.தொடர்ந்து மார்கோ ரூபியோ அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் நடக்கும் ஐடெக்ஸ் சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி வளாகத்திற்கு சென்றார். அப்போது அங்கு பார்வையிட வருகை புரிந்திருந்த அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானை சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பில் மத்திய கிழக்கு மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், காசாவில் உள்ள நெருக்கடியை தீர்ப்பதற்கான முயற்சிகள், பிரதேச அளவிலான அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்த விவகாரங்கள் பற்றி பேசப்பட்டது. அப்போது அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் கூறுகையில், "இருநாட்டு தீர்வை அடிப்படையாக கொண்டு நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் ஒரு பாதையுடன் இணைப்பதன் மூலம் காசாவின் மறுகட்டமைப்பை பிரதேச அளவில் உறுதி செய்வது முக்கியம். பிரதேச அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மோதல் விரிவடைவதை தடுக்க வேண்டியது அவசியமாகும். அதேபோல் அமைதிக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் பாலஸ்தீன மக்களை வெளியேற்றும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முயற்சியையும் அமீரகம் நிராகரிக்கிறது. இதில் அமீரகம் உறுதியாக உள்ளது என மீண்டும் வலியுறுத்துகிறேன்" என்று அவர் குறிப்பிட்டார்.

மூலக்கதை