தேர்தல் ஆணையத்தில் அனல் பறக்கும் இரட்டை இலை விவகாரம்

  தினத்தந்தி
தேர்தல் ஆணையத்தில் அனல் பறக்கும் இரட்டை இலை விவகாரம்

புதுடெல்லி, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்து வருகிறார். அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னமும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.விடமே இருக்கிறது. அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை ஐகோர்ட்டு முன்னர் அனுமதி அளித்திருந்தது. இதன் அடிப்படையில் தேர்தல் ஆணையமும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களிடம் விசாரணையை மேற்கொண்டு வந்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்றும் அனுமதி அளித்தது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் மற்றும் பொதுச்செயலாளர் பதவி குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்ற சென்னை ஐகோர்ட்டின் உத்தரவு பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. இந்தநிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், சூரியமூர்த்தி அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர் இல்லை. தேர்தலில் வேறு கட்சியின் சார்பாக அ.தி.மு.க வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டவர். அவருக்கு அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் தொடர்பாக மனு அளிக்கவோ, வழக்கு தொடுக்கவோ எந்த உரிமையும் கிடையாது. உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருந்தால், அதுகுறித்து சிவில் கோர்ட்டில்தான் முறையிட வேண்டுமே தவிர, தேர்தல் ஆணையத்தில் முறையிட முடியாது. எனவே சூரியமூர்த்தி மனுக்களை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

மூலக்கதை