மியான்மரில் போலி கால் சென்டரில் சிக்கியவர்களை மீட்க தனி விமானம் அனுப்பிய சீனா

  தினத்தந்தி
மியான்மரில் போலி கால் சென்டரில் சிக்கியவர்களை மீட்க தனி விமானம் அனுப்பிய சீனா

பீஜிங், தாய்லாந்து-மியான்மர் எல்லையில் சர்வதேச மோசடி கும்பலால் பல போலி கால் சென்டர்கள் செயல்படுகின்றன. அவற்றில் பணிபுரிய பெரும்பாலும் வெளிநாடுகளில் உள்ள வேலையில்லா பட்டதாரிகள் குறிவைக்கப்படுகின்றனர். நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை என நம்பி அவர்களும் அங்கு செல்கின்றனர். ஆனால் அங்கு சென்ற பிறகு அவர்களது பாஸ்போர்ட் உள்ளிட்ட அசல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. பின்னர் வெளிநாடுகளில் உள்ள பிரபல தொழிலதிபர்கள், பணக்காரர்களை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்த அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி உலக நாடுகள் பலவும் வலியுறுத்தின. அதன்படி போலி கால் சென்டர்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் மியான்மரில் போலி கால் சென்டரில் பணிபுரிந்த 1,000-க்கும் மேற்பட்ட சீன தொழிலாளர்கள் மீட்கப்பட்டு தாய்லாந்து கொண்டு வரப்பட்டனர். இதனையடுத்து அவர்களை மீட்பதற்காக சீனா தனி விமானங்களை தாய்லாந்துக்கு அனுப்பி உள்ளது. இந்த நடவடிக்கைக்குப்பின்னர் அவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப உள்ளனர். இந்நிலையில் மியான்மர் ராணுவ அரசாங்கத்துடன் இணைந்த ஒரு குழுவான கரேன் எல்லைக் காவல் படை, வரும் நாட்களில் மியான்மர்-தாய்லாந்து எல்லைப் பகுதியில் இருந்து மேலும் 10,000 பேரை நாடு கடத்துவதாக தெரிவித்துள்ளது. முன்னதாக தாய்லாந்து, சீனா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகள், தாய்லாந்து-மியான்மர் எல்லையில் உள்ள மோசடி மையங்களை மூடுவதற்கு இணைந்து செயல்பட்டு வருகின்றன.மியான்மரில் உள்ள ஆன்லைன் மோசடி மையங்களில் 1,20,000 பேர் வரை சிக்கி இருக்கலாம் என்று ஐ.நா. மதிப்பிடுகிறது, அங்கு குற்றவியல் கும்பல்கள் நாட்டின் உறுதியற்ற தன்மை மற்றும் நடந்து வரும் உள்நாட்டுப் போரைப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை