திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆசிரியர் பதவி உயர்வில் சமூக அநீதியைப் போக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

  தினத்தந்தி
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆசிரியர் பதவி உயர்வில் சமூக அநீதியைப் போக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னை,பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பதவி உயர்வு வழங்கும் நடைமுறைகள் தொடங்கியுள்ள நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றி பல்கலைக்கழகப் பணிக்கு மாற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு பேராசிரியர் பணிக்கான பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது. இந்த சமூக அநீதி கண்டிக்கத்தக்கது.பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு பேராசிரியர், மூத்த பேராசிரியர் நிலை வரையிலும், கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு இணைப் பேராசிரியர் வரையிலும் பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். 2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பல உறுப்புக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அவற்றுக்கு பல ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 2019ஆம் ஆண்டில் உறுப்புக் கல்லூரிகள் அனைத்தும் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டனர். அப்போது பல்கலைக்கழகத்தின் சார்பில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி 34 ஆசிரியர்கள் மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துக் கொள்ளப்பட்டார்கள். இப்போது பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் திரும்பி விட்ட அவர்களுக்கு பேராசிரியர் நிலை வரை பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், அவர்களை ஏற்கனவே இருந்த கல்லூரி ஆசிரியர்களாகவே கருதி அவர்களுக்கு இணைப் பேராசிரியர் நிலை வரை மட்டும் தான் பதவி உயர்வு வழங்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் கூறுகிறது. இது தவறு மட்டுமின்றி, சமூக அநீதியும் ஆகும். அவர்கள் 34 பேரும் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் என்பதால் அவர்களுக்கு பேராசிரியர் நிலை வரை பதவி உயர்வு வழங்கப்படுவதை பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை