சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

லாகூர்,9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த தொடரின் 4-வது லீக் ஆட்டம் லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் 2 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை (பி பிரிவு) எதிர்கொள்கிறது.ஆஸ்திரேலியா அணியில் காயம் காரணமாக கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் விலகியதும், ஆல்-ரவுண்டர்கள் மிட்செல் மார்ஷ், கேமரூன் கிரீன் இடம் பெறாததும், மற்றொரு ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் திடீரென ஓய்வு அறிவித்ததும் ஆஸ்திரேலிய அணிக்கு பெருத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது.இருப்பினும் ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங்கில் மேத்யூ ஷார்ட், கேப்டன் ஸ்டீவன் சுமித், அதிரடி ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல் நல்ல பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் ஆடம் ஜம்பா, சீன் அப்போட், நாதன் எல்லிஸ், ஸ்பென்சர் ஜான்சன் நம்பிக்கை அளிக்கின்றனர்.இங்கிலாந்து அணியை பொருத்தவரை கடந்த 2023-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் லீக் சுற்றுடன் வெளியேறியது. அதன் பிறகு ஒருநாள் போட்டி தொடர் எதனையும் வெல்லவில்லை. கடந்த நவம்பர் மாதம் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோற்ற இங்கிலாந்து அணி சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான தொடரில் 0-3 என்ற கணக்கில் முழுமையாக சரணடைந்தது. இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக், கேப்டன் ஜோஸ் பட்லரும், பந்து வீச்சில் பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க்வுட்டும் வலு சேர்க்கிறார்கள்.சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 161 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 91-ல் ஆஸ்திரேலியாவும், 65-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்று இருக்கின்றன. 2 ஆட்டம் 'டை' ஆனது. 3 ஆட்டத்தில் முடிவில்லை. சாம்பியன்ஸ் கோப்பையில் இரு அணிகளும் 5 முறை சந்தித்ததில் இங்கிலாந்து 3 முறையும், ஆஸ்திரேலியா 2 தடவையும் வென்றுள்ளன.இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-ஆஸ்திரேலியா:-மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), ஜோஷ் இங்லிஸ்,லபுஸ்சேன், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், சீன் அப்போட், நாதன் எலிஸ், ஆடம் ஜம்பா, ஸ்பென்சர் ஜான்சன்.இங்கிலாந்து:-பில் சால்ட், பென் டக்கெட், ஜாமி சுமித், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜோப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ், அடில் ரஷித், மார்க் வுட்.
மூலக்கதை
