பேச்சுவார்த்தை நடத்திய மத்திய மந்திரிகள்: தொடரும் விவசாயிகள் போராட்டம்

சண்டிகார், பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நேற்று (பிப்.22) சண்டிகரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சண்டிகார் மகாத்மா காந்தி பொது நிர்வாக நிறுவனத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசு சார்பில் மத்திய மந்திரிகள் சிவராஜ் சிங் சவுகான், பியூஷ் கோயல், பிரகலாத் ஜோஷி ஆகியேர் கலந்து கொண்டனர். பஞ்சாப் அரசு சார்பில் மாநில மந்திரிகள் ஹர்பால் சிங் சீமா, குர்மீத் சிங் குத்தின் உள்ளிட்டோரும், விவசாயிகள் சார்பில் ஜக்ஜித் சிங் தாலேவால், சர்வான் சிங் பாந்தர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.பேச்சுவார்த்தைக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ் சிங் சவுகான், 'விவசாயிகளுடன் ஒரு சிறப்பான பேச்சுவார்த்தை நடந்தது. அடுத்த சுற்று பேச்சுவார்த்தை மார்ச் 19-ந்தேதி சண்டிகாரில் நடைபெறும்' என கூறினார்.இதனிடையே மத்திய மந்திரிகளுடனான பேச்சுவார்த்தைகள் முடிவுபெறாதநிலையில் விவசாயிகளின் போராட்டங்கள் தொடர்கின்றன.முன்னதாக பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம், மின்சாரக் கட்டண உயர்வு கூடாது, போலீஸ் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும், 2021 லக்கிம்பூர் கேரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை விவசாய சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மூலக்கதை
