சாம்பியன்ஸ் கோப்பை: பாகிஸ்தானை வெல்லும் முனைப்பில் களமிறங்கும் இந்தியா

துபாய், 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இருந்தது. இந்நிலையில் இந்த போட்டி தொடரின் 5-வது லீக் ஆட்டம் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியனும், பரம எதிரியுமான பாகிஸ்தானை (ஏ பிரிவு) எதிர்கொள்கிறது.இந்திய அணியின் பேட்டிங்கில் துணை கேப்டன் சுப்மன் கில் சூப்பர் பார்மில் இருக்கிறார். அவர் கடந்த 4 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 2 அரைசதம், 2 சதம் அடித்து அசத்தினார். கேப்டன் ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர், அக்ஷர் பட்டேல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். விராட்கோலி தொடர்ந்து தடுமாற்றம் கண்டு வருகிறார். அவர் கணிசமான பங்களித்தால் மிடில் வரிசை மேலும் வலுவடையும். கோலி இன்னும் 15 ரன் எடுத்தால் ஒருநாள் போட்டியில் 14 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டிய 3-வது வீரர் என்ற சிறப்பை பெறுவார். பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் விக்கெட் வீழ்த்தவில்லை. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரைஇறுதியை நெருங்கி விடலாம் என்பதால் இந்திய அணியினர் கடந்த ஆட்டத்தில் பீல்டிங்கில் செய்த தவறுகளை களைந்து, முழு திறனை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். 29 ஆண்டுக்கு பிறகு ஐ.சி.சி.போட்டியை நடத்தும் பாகிஸ்தான் கராச்சியில் நடந்த தொடக்க லீக்கில் 60 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் பணிந்தது. தனது பிரிவில் கடைசி இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு இது வாழ்வா-சாவா ஆட்டமாகும். இதில் தோல்வி அடைந்தால் அந்த அணியின் அரைஇறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விடும். இதனால் அந்த அணி கடும் நெருக்கடியுடன் கால் பதிக்கிறது.பாகிஸ்தான் அணியின் தொடக்க பேட்டிங் வரிசை சொதப்பி வருகிறது. கடந்த ஆட்டத்தில் தொடக்க வீரர் பாபர் அசாம் அரைசதம் அடித்தாலும் அவரது பேட்டிங் மந்தமாகவே இருந்தது. காயத்தால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பஹர் ஜமான் விலகி விட்டதால் அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டு இருக்கும் இமாம் உல்-ஹக் தொடக்க வீரராக களம் காணுவார் என்று தெரிகிறது. மிடில் ஆர்டரில் கேப்டன் முகமது ரிஸ்வான், சல்மான் ஆஹா, குஷ்தில் ஷா ஆகியோர் வலுசேர்க்கிறார்கள். பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி நல்ல நிலைக்கு திரும்ப வேண்டியதுடன், சுழற்பந்து வீச்சாளர்களும் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.அரைஇறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்த இந்திய அணியும், அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க பாகிஸ்தான் அணியும் வரிந்து கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 135 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 57 ஆட்டங்களில் இந்தியாவும், 73 ஆட்டங்களில் பாகிஸ்தானும் வென்று இருக்கின்றன. 5 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 11 ஒருநாள் போட்டிகளில் 9-ல் இந்தியா வாகை சூடியுள்ளது என்பது நினைவுகூரத்தக்கது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் 5 முறை சந்தித்ததில் பாகிஸ்தான் 3 முறையும், இந்தியா 2 தடவையும் வென்று இருக்கின்றன. இதில் 2017-ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 180 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியதும் அடங்கும்.மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் 2-வது பேட்டிங் செய்வது கடினமானதாகும். எனவே இந்த ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், அக்ஷர் பட்டேல், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, குல்தீப் யாதவ்.பாகிஸ்தான்: இமாம் உல்-ஹக், பாபர் அசாம், சாத் ஷகீல், முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் ஆஹா, தயாப் தாஹிர், குஷ்தில் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி,நசீம் ஷா,ஹாரிஸ் ரவுப்,அப்ரார் அகமது.மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் ராட்சத திரையில் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்புபிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் நேரடி ஒளிபரப்பை பொதுமக்கள் ராட்சத திரையின் மூலம் கண்டுகளிக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.இதன்படி விவேகானந்தா நினைவு இல்லத்துக்கு எதிர்புறத்தில் மெரினா கடற்கரையிலும், பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள போலீஸ் பூத் அருகிலும் இந்த போட்டி ராட்சத திரையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
மூலக்கதை
