தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண்ணின் தந்தை மரணம்; திருமண வீட்டில் பரிதாபம்

  தினத்தந்தி
தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண்ணின் தந்தை மரணம்; திருமண வீட்டில் பரிதாபம்

ஐதராபாத்,தெலுங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டம், பிக்கனூர் அடுத்த ராமேஸ்வர பள்ளியை சேர்ந்தவர் பால் சந்திரம் (வயது 55). இவர் காம ரெட்டியில் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி ராஜாமணி தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் கனக மகா லட்சுமிக்கும் பெங்களூரை சேர்ந்த ராகவேந்திரா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.அதன்படி நேற்று முன்தினம் மாலை ஜங்கம்பள்ளி புறநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமான முறையில் திருமண ஏற்பாடுகள் செய்திருந்தனர்.அன்றிரவு நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உறவினர்கள் நண்பர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். பாட்டுக் கச்சேரி, ஆடல், பாடல் என திருமண மண்டபம் களைக்கட்டி இருந்தது.நேற்று காலை தாலி கட்டும் முன்பாக திருமண விழாவில் ஒரு பகுதியாக கன்னிகாதானம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பால் சந்திரம் தனது மகளின் கையை பிடித்து மணமகனிடம் ஒப்படைத்தார். அப்போது பால் சந்திரம் திடீரென மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு மண்டபத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அவரை மீட்டு சிகிச்சைகாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பால் சந்திரம் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர்.மணமகளின் தந்தை இறந்ததால் திருமணம் நின்றது. களைக்கட்டி இருந்த திருமண வீடு வெறிச்சோடி சோகத்தில் மூழ்கியது.

மூலக்கதை