நெல்லை அரசு பள்ளி கட்டிடத்தில் தீ விபத்து - புத்தகங்கள் எரிந்து சேதம்

நெல்லை, நெல்லை டவுன் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், மாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவலருக்கான அலுவலகம் உள்பட கல்வித்துறை சார்ந்த பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இங்குள்ள மாவட்ட கல்வி அலுவலக கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பள்ளி வளாகத்திற்குள் உள்ள மற்ற கட்டிடங்களில் தீ பரவாத வகையில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த தீ விபத்தில் நடப்பு ஆண்டு 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகங்கள் கட்டுக்கட்டாக எரிந்து சேதமடைந்தன. சம்பந்தப்பட்ட கட்டிடம் பாழடைந்த நிலையில் இருந்து வந்ததாகவும், அதனை சிலர் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, தீ விபத்திற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூலக்கதை
