விராட் கோலி அபார சதம்... பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

  தினத்தந்தி
விராட் கோலி அபார சதம்... பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

துபாய்,8 அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துபாயில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சவுத் ஷகீல் 62 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 242 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. இந்தியாவின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினர். இதில் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக தொடங்கிய அவர் 20 ரன்களில் அவுட் ஆனார்.இதையடுத்து சுப்மன் கில்லுடன் சீனியர் வீரரான விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. நிதானமாக ஆடிய சுப்மன் கில் 46 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் களம் கண்டார். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தினார். ஸ்ரேயாஸ் ஐயர் - விராட் கோலி இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. இந்த இணையை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் பவுலர்கள் திணறினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்த நிலையில் 56 ரன்னிலும், அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 9 ரன்னிலும் அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய விராட் கோலி தனது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். இறுதியில் விராட் கோலி 100 (111) ரன்களும், அக்சர் படேல் 3 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் ஷாகின் அப்ரிதி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

மூலக்கதை