"போப் பிரான்சிஸ் இன்னும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்" - வாடிகன் நிர்வாகம்

  தினத்தந்தி
போப் பிரான்சிஸ் இன்னும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்  வாடிகன் நிர்வாகம்

வாடிகன் சிட்டி, போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், இரத்த பரிசோதனைகளில் சிறுநீரக செயலிழப்புக்கான அறிகுறிகள் "தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது" என்றும் வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் அண்மை காலமாகவே வயோதிகம் சார்ந்த உடல்நல பிரச்சினைகளால் அவதியுற்று வருகிறார். இது ஒருபுறம் இருக்க சிறுவயதிலேயே பிரான்சிசுக்கு நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்ட நிலையில், நாள்பட்ட நுரையீரல் நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக குளிர்காலத்தில் அவருக்கு மூச்சுக்குழாய் அழற்சி ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.இந்த நிலையில் மூச்சுக்குழாய் அழற்சி மோசமடைந்ததை அடுத்து போப் ஆண்டவர் கடந்த 14-ந் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இதில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது இதயம் நன்றாக செயல்படுவதாகவும் கடந்த வியாழக்கிழமை வாடிகன் நிர்வாகம் தெரிவித்தது. எனினும் 88 வயதான போப் ஆண்டவரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் மூச்சுவிட சிரமப்படுவதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் நேற்று முன்தினம் இரவு தெரிவித்தனர். வாடிகன் நிர்வாகமும் இதனை உறுதி செய்தது.இந்த நிலையில் போப் ஆண்டவர் நிமோனியா மற்றும் சிக்கலான நுரையீரல் நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெறும்போது, நீண்டகால ஆஸ்துமா நோய் அவருக்கு சுவாச நெருக்கடியை ஏற்படுத்துவதாகவும், இதனால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து வருவதாகவும் வாடிகன் நிர்வாகம் நேற்று தெரிவித்திருந்தது. .இந்நிலையில் போப்பின் உடல்நிலை குறித்த புதுப்பிப்பை வாடிகன் நிர்வாகம் பகிர்ந்துள்ளது. அதில், "பரிசுத்த தந்தையின் நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது. எனவே, நேற்று விளக்கப்பட்டது போல், போப் ஆபத்திலிருந்து இன்னும் மீளவில்லை. இன்று காலை, போப் பிரான்சிஸ் ஆஸ்துமா போன்ற நீடித்த தீவிர சுவாச நெருக்கடியை அனுபவித்தார், இதற்கு அதிக ஓட்ட ஆக்சிஜனை நிர்வகிக்க வேண்டியிருந்தது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நிமோனியா பாதிப்பால் போப் பிரான்சிசுக்கு செப்சிஸ் ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். இது நிமோனியாவால் ரத்தத்தில் ஏற்படும் ஒருவித நோய் ஆகும். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.

மூலக்கதை