தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

  தினத்தந்தி
தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க 5ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் அடுத்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 15-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட இருக்கின்றன. பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன?, துறைகள் வாரியாக நிதி ஒதுக்கீடு எவ்வளவு? என்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதன் பின்னர் முதல்-அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;"தமிழ்நாடு இன்று மிகப்பெரிய உரிமை போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதிக்க வருகிற 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 40 கட்சிகளை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று அந்த கட்சிகளுக்கு கடிதம் அனுப்ப உள்ளோம். "மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் தமிழகம் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் தொகை குறைவாக இருக்கின்ற காரணத்தினால் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு செய்வதால் தமிழ்நாட்டில் 8 தொகுதிகளை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நீட் விலக்கு, மும்மொழிக் கொள்கை பிரச்சினையில் குரல் எழுப்ப நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கை அவசியமான ஒன்று. நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரலை ஒடுக்க மத்திய அரசு சதி வேலை செய்கிறது. தற்போது இந்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று உங்களின் மூலமாக கேட்டுக் கொள்கிறேன்."இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை