இது ஓமன் மற்றும் அமெரிக்காவை விட மோசம் - பாக். அணியை விளாசும் முன்னாள் வீரர்

லாகூர், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிராக தோல்வி கண்டதால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது. அந்த அணி கடந்த ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பைகளிலும் லீக் சுற்றை தாண்டவில்லை. இதனால் பாகிஸ்தான் அணியை அந்நாட்டின் முன்னாள் வீரர்கள் உள்பட பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வரிசையில் முன்னாள் வீரரான வாசிம் அக்ரம் இந்த அணி மீது கடுமையான நடவடிக்கைகள் தேவை என்று விளாசியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "கடுமையான நடவடிக்கைகள் தேவை. நாம் பல ஆண்டுகளாக வெள்ளைப் பந்தில் பழமையான கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். இது மாற வேண்டும். அச்சமற்ற இளம் வீரர்களை அணியில் கொண்டு வாருங்கள். நீங்கள் 5-6 மாற்றங்களை செய்ய வேண்டியிருந்தால் தயவுசெய்து அதை செய்யுங்கள்.அடுத்த 6 மாதங்களுக்கு தொடர்ந்து தோல்வியடைந்தாலும் பரவாயில்லை. ஆனால் இப்போதிருந்து 2026 டி20 உலகக்கோப்பைக்கான அணியை உருவாக்கத் தொடங்குங்கள். கடந்த 5 ஒருநாள் போட்டிகளில், பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் 60 சராசரியுடன் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அதாவது ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள்.இது ஓமன் மற்றும் அமெரிக்காவை விட மோசமாக உள்ளது. ஒருநாள் போட்டிகளில் விளையாடும் 14 அணிகளில், பாகிஸ்தானின் பந்துவீச்சு சராசரி இரண்டாவது மிக மோசமானதாக உள்ளது. தலைவர் சாப், தயவுசெய்து கேப்டன், தேர்வுக் குழு மற்றும் பயிற்சியாளரை அழைத்து, அவர்கள் என்ன மாதிரியான தேர்வை மேற்கொண்டுள்ளனர் என்று கேளுங்கள். குஷ்தில் ஷா மற்றும் சல்மான் ஆகா எப்போதாவது விக்கெட் எடுப்பது போல் இருந்தார்களா?. இந்த அணி நல்லதல்ல என்று நான் வாரக்கணக்கில் கூச்சலிட்டு வருகிறேன், ஆனால் அவர்கள் சிறந்த அணியை ஒன்று சேர்த்துள்ளதாக சொன்னார்.சாம்பியன்ஸ் டிராபிக்கு ஒரு நாள் முன்பு, அவர்கள் ஒரு மணி நேரம் ஒரு கூட்டம் நடத்தினர், ஆனால் அதே அணியுடன் வெளியே வந்தனர். கேப்டன் (ரிஸ்வான்) கூட காரணம். அவர்தான் இந்த அணியின் தலைவர், அவருக்கு எந்த மாதிரியான மேட்ச்-வின்னர் தேவை என்று தெரியவில்லை தற்போது அது சங்கடமாகி வருகிறது.மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் ரசிகர்களின் முகங்களை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். பாகிஸ்தான் பந்துவீசிக் கொண்டிருந்தபோது 15 ஓவர்களிலேயே அவர்கள் மைதானத்தை விட்டு வெளியேற தொடங்கி விட்டனர்" என்று கூறினார்.
மூலக்கதை
