காதலனுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம்: மன உளைச்சலில் கழுத்தை அறுத்து நர்சு தற்கொலை

  தினத்தந்தி
காதலனுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம்: மன உளைச்சலில் கழுத்தை அறுத்து நர்சு தற்கொலை

திருவாரூர்,திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த அசேஷம் ராஜராஜன் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர், சென்னையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூன்றாவது மகள் நிஷா. பி.எஸ்சி நர்சிங் படித்துள்ள இவர் சவுதி அரேபியாவில் நர்சாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்த நிஷா இன்று மீண்டும் சவுதி அரேபியா திரும்பி செல்ல விமான டிக்கெட் எடுத்து இருந்தார்.நேற்று முன்தினம் இரவு மற்ற இரு சகோதரிகளுடன் வீட்டில் இருந்த நிஷா, கழிவறைக்கு சென்றார். வெகு நேரம் ஆகியும் அவர் வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உடன்பிறந்த சகோதரிகள் இருவரும் கழிவறையின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது நிஷா தனது கழுத்தில் கத்தியால் அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அதைப்பார்த்து பதறிப்போன அவரது குடும்பத்தினர் உடனடியாக நிஷாவை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், நிஷா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி நகர போலீசார், நிஷாவின் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், நிஷா, சவுதி அரேபியாவில் பணியாற்றியபோது கேரளாவை சேர்ந்த ஒருவரை காதலித்ததாகவும், அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும், இதனால் நிஷா, மன உளைச்சல் அடைந்து 15 நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்து கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியால் மன்னார்குடியை சேர்ந்த நர்சு, கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை