சாம்பியன்ஸ் டிராபி; ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா ஆட்டம் மழையால் ரத்து

ராவல்பிண்டி,9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்த தொடரில் தற்போது வரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் குரூப் ஏ-வில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. இந்நிலையில், இந்த தொடரில் ராவல்பிண்டியில் இன்று நடைபெற இருந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுவதாக இருந்தது. ஆனால் இந்த ஆட்டம் தொடங்கும் முன்னரே அங்கு மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.மழை நின்ற பின்னர் ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு மழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
மூலக்கதை
