தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

சென்னை,தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் நாளை (26-02-2025) காலை 7.45 மணிக்கு நடக்கிறது. விழுப்புரத்தில் நடந்த கட்சியின் முதல் மாநாட்டுக்கு பிறகு விஜய் பங்கேற்கும் கூட்டம் என்பதால் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனிடையே நாளை நடைபெறும் ஆண்டு விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் 2026 சட்டசபை தேர்தல், கூட்டணி, கட்சியை பலப்படுத்த என்ன செய்ய வேண்டும்? என்பது தொடர்பாக தொண்டர்கள் மத்தியில் விஜய் பேச இருக்கிறார். இதற்கான ரகசிய ஆலோசனை கூட்டமாகத்தான் இந்த நிகழ்வு நடக்க இருக்கிறது. கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத்துடன் தேர்தல் வியூக பணியில் கைகோர்த்துள்ள பிரசாந்த் கிஷோரும் பங்கேற்க இருக்கிறார். இதுதவிர தமிழக வெற்றிக்கழத்தின் அரசியல் ஆலோசனை குழுவில் உள்ள ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள். அந்த வகையில் இந்த கூட்டம் முழுக்க, முழுக்க 2026 தேர்தல் வியூகத்தை மேற்கொள்வதற்கான கூட்டமாகவே அமைய இருக்கிறது. தற்போது வரை அறிவிக்கப்பட்டுள்ள 95 மாவட்ட செயலாளர்கள், துணை செயலாளர்கள், துணை தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் என 600 பேர் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்கள்.நிர்வாகிகளுக்கு சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான பயிற்சியை பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் வழங்க இருக்கிறார்கள். மக்களை எவ்வாறு சந்திக்க வேண்டும், எதை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும், மற்ற கட்சிகளில் இருந்து வேறுபட்டு மக்கள் சேவை ஆற்றுவது குறித்து அவர்கள் பயிற்சி அளிக்கிறார்கள். அதன்பிறகு கட்சியின் தலைவர் விஜய் கூட்டத்தில் பேசுகிறார்.இந்தநிலையில், சென்னை அடுத்த நீலாங்கரையில் உள்ள இல்லத்தில், த.வெ.க. தலைவர் விஜயை, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் நேரில் சந்தித்தார். சந்திப்பின்போது நாளை (பிப்.26) நடக்கவிருக்கும் த.வெ.க. ஆண்டு விழாவில் என்ன மாதிரியான கருத்துகளை முன்வைப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பின்போது என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் உடனிருந்தனர்
மூலக்கதை
