அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

  தினத்தந்தி
அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்க வேண்டும்  ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி வருபவர் சத்யா. 1997 ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் பணி வரன்முறை செய்யக்கோரி சென்னையில் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வாழ்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு 12 வாரத்தில் பணி வரன்முறை செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில்ல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கோர்ட்டு, தற்காலிக அடிப்படையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன். ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத்துறையின் கூடுதல் செயலாளர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் தற்காலிக பணியாளர்கள் நியமனங்களை கைவிடுவதாக 2020-ம் ஆண்டு 28ந் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அமர்வு, 2020-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பின்னர் நியமிக்கப்பட்ட அனைத்து தற்காலிக பணியாளர்களும் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.மேலும் தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்வதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு யாரேனும் நியமிக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது. இந்நிலையில் தற்காலிக பணியாளர்களை நீக்கம் செய்வது மற்றும் ஒரு ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து மார்ச் 17-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யக்கோரி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு, வழக்கு விசாரணையை மார்ச் 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

மூலக்கதை