தொகுதி மறுசீரமைப்பு என்று முதல்-அமைச்சர் ஏன் கபட நாடகமாடுகிறார்? - அண்ணாமலை

கோவை,மக்கள் தொகை அடிப்படையில் தொகுதியை பிரித்தால், தமிழகத்தில் இருக்க கூடிய தொகுதிகளில் 8 தொகுதியை இழக்க கூடிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இது பற்றி விவாதிக்க, மார்ச் 5ல் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு என்று எங்கேயும் சொல்லவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் பயத்தை ஏற்படுத்துகிறார். யாருமே தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசாத நிலையில் முதல்-அமைச்சர் ஏன் கபட நாடகமாடுகிறார்? மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்த முயலும் முதல்-அமைச்சரை வன்மையாக கண்டிக்கிறேன். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல்-அமைச்சர் தவறான தகவல்களை கூறுகிறார். மும்மொழிக்கொள்கையில் தோற்றதால் மடைமாற்றம் செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார். நாடாளுமன்ற தொகுதிகள் குறையும் என யார் சொன்னார்கள் என்பதை முதல்-அமைச்சர் தெரிவிக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு பற்றி சொல்லாத நிலையில் அனைத்துக்கட்சி கூட்டம் ஏன்?முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் யார் சொன்னார்கள் என்று கூறினால் அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்கும். மறுசீரமைப்பு வரும்போது தமிழகத்திற்கு பாதிப்பு வராமால் செய்வது எங்கள் பொறுப்பு. மறுசீரமைப்பால் தென்மாநிலங்களுக்கு எந்த பாதிப்பும் வராது. இந்தியாவில் எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பெயிண்ட் எடுத்துச்செல்லும் திமுகவினர் இந்திக்கு பதில் ஆங்கிலத்தை அழிக்க முயற்சிக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
மூலக்கதை
