துபாய் கர்டின் பல்கலைக்கழகத்தில் சர்வதேச கருத்தரங்கம் - 36 நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்பு

துபாய்,துபாய் கர்டின் பல்கலைக்கழகம் சார்பில், துபாய் போலீஸ் பயிற்சி மையம் ஆதரவில் புதுமை, நிலைத்தன்மை மற்றும் பயன்பாட்டு அறிவியலுக்கான 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் போலீஸ் பயிற்சி மையத்தின் முகம்மது பின் ராஷித் அரங்கில் நடைபெற்றது. இதில் 36 நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டனர்.துபாய் கர்டின் பல்கலைக்கழகம் சார்பில் உலகளாவிய நிலைத்தன்மை சவால்களை எதிர்கொண்டு அதற்கு தீர்வு காணும் வகையில் புதுமை, நிலைத்தன்மை மற்றும் பயன்பாட்டு அறிவியலுக்கான சர்வதேச கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கில் துபாய் கர்டின் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் தலைவர் பேராசிரியர் அம்மார் காகா வரவேற்புரையாற்றினார். இதில் தலைமை விருந்தினராக 'கிரீன் ஷேக்' என அழைக்கப்படும் அஜ்மான் ஆட்சியாளர் குடும்பத்தை சேர்ந்தவரும், அரசுக்கான சுற்றுச்சூழல் ஆலோசகருமான ஷேக் அப்துல் அஜீஸ் அல் நுயைமி கலந்து கொண்டு பேசினார்.அதேபோல கவுரவ விருந்தினராக சுற்றுச்சூழலுக்கான ஜாயித் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் முகம்மது பின் பஹத் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து கர்டின் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக்கான உதவி துணைவேந்தர் பிட்ஸ்ஜெரால்டு தொடக்க உரையாற்றினார். அடுத்ததாக அந்த பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி பிரிவின் இயக்குனர் பேராசிரியர் டாக்டர் சித்திரை பொன் செல்வன் கருத்தரங்கை தலைமை தாங்கி உரையாற்றினார்.நிகழ்ச்சியில் தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கான ஜாயித் சர்வதேச அறக்கட்டளையின் தொழில்நுட்ப ஆலோசகர் டாக்டர் ஈசா அப்துல்லத்தீப் மற்றும் ஆஸ்திரேலிய கர்டின் பல்கலைக்கழகத்தின் நிலைத்தன்மை பொறியியல் குழுவின் துணை இயக்குனர் பேராசிரியர் வாஹிதுல் பிஸ்வாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.தொடக்க விழாவை தொடர்ந்து போலீஸ் பயிற்சி மையத்தின் வகுப்பறைகளில் சர்வதேச அளவில் கலந்து கொண்ட 36 நாடுகளை சேர்ந்த பல்வேறு நிபுணர்கள் நிலைத்தன்மை, பசுமை தொழில்நுட்பங்கள், சுற்றுச்சூழல் மேலாண்மை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 127 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு பேசினர். தமிழகத்தில் இருந்து மட்டும் 75-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டு ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டனர்.குறிப்பாக கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் ஆ.முகமது முகைதீன் கலந்து கொண்டு துபாயில் நிலைத்தன்மை வாய்ந்த வணிக வளர்ச்சியில் சவால்கள், அளவீடுகள் மற்றும் தீர்வுகள் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டு பேசினார். இதில் நிலைத்தன்மை குறித்த தலைப்புகளில் கேள்வி-பதில் நிகழ்ச்சியும் இடம் பெற்றது. இந்த 2 நாள் கருத்தரங்கில் நிலைத்தன்மை வாய்ந்த மண் மேலாண்மை நடைமுறைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. மேலும் வரும் ஆண்டில் மண் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் அதனை முக்கிய கருப்பொருளாக கொண்டு கருத்தரங்கம் நடத்தப்படும் என அந்த பல்கலைக்கழகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
மூலக்கதை
