தொகுதி மறுசீரமைப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிலைப்பாட்டுக்கு கே.டி.ராமராவ் ஆதரவு

  தினத்தந்தி
தொகுதி மறுசீரமைப்பு: முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிலைப்பாட்டுக்கு கே.டி.ராமராவ் ஆதரவு

சென்னை,மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு செய்யும்போது தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று குற்றம் சாட்டி இருந்தார். மேலும் தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாட்டைப் பற்றியது மட்டுமல்ல, இது தென்னிந்தியா முழுவதையும் பாதிக்கிறது. மக்கள்தொகை வளர்ச்சியை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி, வளர்ச்சிக்கு வழிவகுத்து, தேசிய முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த மாநிலங்களை ஒரு ஜனநாயக செயல்முறை தண்டிக்கக்கூடாது. உண்மையான கூட்டாட்சியை நிலைநிறுத்தும் நியாயமான, வெளிப்படையான மற்றும் சமமான அணுகுமுறை நமக்குத் தேவை" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.இந்தநிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த கருத்துக்கு தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி கே.சி.ஆரின் மகனும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமாராவ் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "ஸ்டாலினுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். மேலும், இந்த விஷயத்தில் அவரை முற்றிலும் ஆதரிக்கிறேன். தேசத்திற்கு மிகவும் தேவைப்படும்போது, குடும்பக் கட்டுப்பாட்டு திட்டங்களை முறையாகசெயல்படுத்தியதற்காக தென் மாநிலங்களை நீங்கள் தண்டிக்க முடியாது. தென் மாநிலங்களின் முயற்சிகளை கருத்தில் கொள்ளாமல் தொகுதி மறுசீரமைப்பை செயல்படுத்துவது ஜனநாயகம், கூட்டாட்சி உணர்வில் இல்லை. தொகுதி மறுசீரமைப்பை செயல்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வமாக இருந்தால், தேசத்திற்கு நிதி பங்களிப்புகளின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை நான் முன்மொழிகிறேன். தேசியக் கட்டுமானத்தில் தெலுங்கானா மற்றும் தென் மாநிலங்களின் பங்களிப்பை யாரும் புறக்கணிக்க முடியாது. உதாரணமாக, நாட்டின் மக்கள் தொகையில் தெலுங்கானா 2.8 சதவீதம் மட்டுமே இருந்தாலும், அது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.2 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிக்கிறது" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை