ஜனாதிபதி திரவுபதி முர்மு குஜராத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்

புதுடெல்லி,ஜனாதிபதி திரவுபதி முர்மு குஜராத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் ஆமதாபாத் நகருக்கு இன்று வந்தடைந்து உள்ளார். அவரை கவர்னர் ஆச்சார்யா தேவ்விரத் மற்றும் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் ஆகியோர் ஆமதாபாத் விமான நிலையத்தில் வரவேற்றனர்.இதேபோன்று மந்திரி ஜெகதீஷ் விஸ்வகர்மா, நகர மேயர் பிரதீபா ஜெயின், மாநில முதன்மை செயலாளர் பங்கஜ் ஜோஷி, டி.ஜி.பி. விகாஸ் சஹாய், கலெக்டர் சுஜீத் குமார் மற்றும் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்த பயணத்திற்கு முன்னர் நர்மதா மாவட்டத்தில் சர்தார் சரோவர் அணைக்கு நேரில் சென்று அவர் பார்வையிட்டார்.அப்போது, அதன் கட்டுமான பணியின்போது எதிர்கொண்ட சவால்கள், பெரிய அளவில் நீர் தேக்கி வைப்பதன் முக்கியத்துவம் மற்றும் விரிவாக்கப்பட்ட கால்வாய் வசதிகள் மற்றும் அதன் பலன்கள் ஆகியவை பற்றியும் கேட்டறிந்து உள்ளார்.குஜராத் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அணையின் நீரால் ஏற்பட கூடிய பலன்கள், மக்களுக்கு ஏற்படும் நேர்மறை தாக்கம் ஆகியவை பற்றியும் அவரிடம் விரிவாக விளக்கி கூறப்பட்டது.இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அவர், தேசிய வடிவமைப்பு மையம் (என்.ஐ.டி.) மற்றும் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்.
மூலக்கதை
