மகா கும்பமேளாவில் பங்கேற்காத ராகுல், பிரியங்கா - துறவிகள் விமர்சனம்

  தினத்தந்தி
மகா கும்பமேளாவில் பங்கேற்காத ராகுல், பிரியங்கா  துறவிகள் விமர்சனம்

அமேதி,உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி மாதம் 13-ந் தேதி தொடங்கியது. பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது பூரண கும்பமேளா என்றும், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது மகா கும்பமேளா என்றும் அழைக்கப்படுகிறது.இந்த மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாதுக்கள், துறவிகள், மடாதிபதிகள் பிரயாக்ராஜ் நகரில் வந்து தங்கியுள்ளனர். அவர்கள் முக்கிய தினங்களாக கருதப்படும் அமிர்த ஸ்நான நாட்களில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, சிறப்பு பூஜைகளை செய்தனர்.ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்-நடிகைகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் புனித நீராடினார்கள். இதுதவிர நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, வழிபாடுகளை நடத்தினார்கள். 45 நாட்கள் கோலாகலமாக நடந்து வந்த மகா கும்பமேளா, சிவராத்திரி தினமான நேற்றுடன் நிறைவடைந்தது.இந்தநிலையில், மகா கும்பமேளாவுக்கு காங்கிரஸ் முக்கியத் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா வருகை தருவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசிவரை வராத அவர்களை துறவிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.உ.பி. அமேதியில் உள்ள பரமஹன்ஸ் மடத்தின் தலைவரான துறவி பீடாதிஷ்வர் சிவயோகி மவுனி கூறுகையில்,கங்கை தாயின் மடியில் அமர்ந்தால் காங்கிரஸ் செய்யும் மதத்துக்கு எதிரான அரசியல் முடிவுக்கு வந்து விடும். அந்த அச்சத்தால் அவர்கள் மகா கும்பமேளாவுக்கு வரவில்லை. தங்களது அரசியலைத் தொடரவே இவர்களைப் போன்ற அரசியல்வாதிகள் இங்கு தரவில்லை.அவர்களது முன்னோர்கள் கும்பமேளாக்களுக்கு வருகை தந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து பலரும் மகா கும்பமேளாவில் பங்கேற்றனர். ஆனால் காங்கிரசார் வராதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.இதுபோன்ற பிராயாக்ராஜ்ஜில் இருந்த ஒரு துறவி கூறுகையில்,ஒரு இந்துவாக இருந்துகொண்டு இந்த நிகழ்வில் பங்கேற்காதது மற்ற இந்துக்களை அனைவரையும் அவமதிக்கும் செயலாகும். அவர்களுக்கு இந்துக்களின் வாக்குகள் மட்டுமே வேண்டும். ஆனால், இந்து மதத்தின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டார்கள் என்றார்.

மூலக்கதை