தென் மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமித்ஷா பேசுகிறார் - சித்தராமையா

  தினத்தந்தி
தென் மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமித்ஷா பேசுகிறார்  சித்தராமையா

பெங்களூரு, தொகுதி மறுவரையறை தொடர்பாக அமித் ஷா அளித்துள்ள வாக்குறுதி நம்பகத்தன்மையற்றது என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் உறுதிமொழி நம்பகத்தன்மையற்றது, தவறாக வழிநடத்தக் கூடியது. துல்லியமான தகவல் இல்லாததன் காரணமாக அவர் இவ்வாறு பேசியிருக்கலாம். அல்லது கர்நாடகா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களை குறைத்து மதிப்பிடும் திட்டமிட்ட முயற்சியாக இருக்கலாம். பா.ஜ.க.வின் ஆதிக்கத்தை எதிர்ப்பதால், தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் செல்வாக்கை பலவீனப்படுத்த மத்திய அரசு எல்லை நிர்ணயத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த விரும்புகிறது. முந்தைய எல்லை நிர்ணயப் பணிகள், 1971 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு நியாயம் அளிப்பதாகவும், தென் மாநிலங்களின் வளர்ச்சி முயற்சிகளை அங்கீகரிப்பதாகவும் இருந்தது. தொகுதி மறுவரையறையை மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது. தற்போது உள்ள அளவை அப்படியே தொடர வேண்டும். கர்நாடக பா.ஜ.க. தலைவர்கள் தெரு சண்டைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், அனைத்து கன்னடர்களும், சாதி, மதம், கட்சி வேறுபாடுகளை மறந்து, மத்திய அரசால் மாநிலத்திற்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்.அநீதிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்த தென் மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வரும் நாட்களில், அநீதியை எதிர்கொள்ளும் அனைத்து மாநிலங்களுடனும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தப்படும்" என்று அதில் சித்தராமையா கூறியுள்ளார்.

மூலக்கதை