தமிழ்நாடு மாநில தகுதித்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

சென்னை, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கு நெட் (NET) அல்லது செட்(SET) தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வை யுஜிசி சார்பில் தேசிய தேர்வு முகமை நடத்தும் நிலையில், தமிழகத்தில் செட் எனப்படும் மாநில அளவிலான தகுதித்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.இந்த சூழலில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மாநில தகுதித் தேர்வு (SET) வருகின்ற அடுத்த (மார்ச்) மாதம் 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி (CBT) வாயிலாக நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "மாநில தகுதித் தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்திட அரசு ஆணையிட்டிருந்தது. அதன்படி, வருகின்ற மார்ச் மாதம் 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி வாயிலாக தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதள முகவரியில் இருந்து தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்னர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு மாநில தகுதித்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மார்ச் 6 முதல் 9ம் தேதி வரை கணினி வழியே நடக்கும் இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலக்கதை
