கொளத்தூரில் பெரியார் மருத்துவமனை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டலின் திறந்து வைத்தார்

  தினத்தந்தி
கொளத்தூரில் பெரியார் மருத்துவமனை: முதல்அமைச்சர் மு.க.ஸ்டலின் திறந்து வைத்தார்

சென்னை,சென்னை கொளத்தூர், பெரியார் நகரில் அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் ரூ. 210 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இப்புதிய மருத்துவமனையில் உள்ள மொத்த 6 தளங்களில் தரைத்தளத்தில் 20 படுக்கைகள் கொண்ட விபத்து மற்றும் அவசரச் சிகிச்சை பிரிவுகள், எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி, புறநோயாளிகள் பிரிவுகளும், முதல் தளத்தில் மகப்பேறு பிரிவு, அறுவைச் சிகிச்சைப் பிரிவு, நவீன இரத்த வங்கியும், இரண்டாம் தளத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவுகள், மூன்றாம் தளத்தில் மகப்பேறு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு பிரிவு, நான்காம் தளத்தில் ஆண்கள் பொது மருத்துவப் பிரிவு, இரைப்பை குடலியல் பிரிவு, ஐந்தாம் தளத்தில் இதயவியல் பிரிவு, அறுவைச் சிகிச்சைப் பிரிவு, தோல்நோய் சிகிச்சைப் பிரிவு, ஆறாம் தளத்தில் சிறப்பு சிகிச்சை வார்டுகள், புற்றுநோயியல் பிரிவு, நரம்பியல் பிரிவு முதலான பல்வேறு பிரிவுகளுடன் மொத்தம் 260 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில், சென்னை கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-வடசென்னை மக்களின் உயிரை காக்கக்கூடிய மருத்துவமனையாக காலத்திற்கும் பெரியார் மருத்துவமனை நிலைத்து நிற்கும். மருத்துவமனைக்கு பெரியார் பெயர் சூட்டியதில் அவரது தொண்டனாக மகிழ்ச்சி அடைகிறேன். கல்வியும் மருத்துவமும் திராவிட மாடல் அரசின் இரு கண்கள். மருத்துவர்கள், செவிலியர்கள் நோயாளிகளை குடும்பத்தில் ஒருவராக பார்த்து சிகிச்சை அளியுங்கள். சுய ஒழுக்கம் அனைவருக்கும் முக்கியம்; பொது இடங்களில் தூய்மையை பேணி காக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்றார்.

மூலக்கதை