அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு... திட்டவட்டமாக மறுத்த சென்னை ஐகோர்ட்டு

  தினத்தந்தி
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு... திட்டவட்டமாக மறுத்த சென்னை ஐகோர்ட்டு

சென்னை, முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், 2011 முதல் 2015ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, இளநிலை பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், நடத்துனர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு பணம் பெற்றுக் கொண்டு நியமனம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மேல்விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது. சுப்ரீம்கோர்ட்டும் முழுமையான விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன் அடிப்படையில் வழக்கை விசாரித்த மத்திய குற்றப் பிரிவு போலீசார், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 2000-க்கும் மேற்பட்டோருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தனர். இந்த கூடுதல் குற்றப்பத்திரிகைகளை இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், போக்குவரத்து துறையில் ஒவ்வொரு பதவிக்கும் பணம் பெற்றது தொடர்பாக தனித்தனியாக கூடுதல் குற்றப்பத்திரிகைகளை போலீசார் தாக்கல் செய்த நிலையில் அவற்றை தனி வழக்காக தான் விசாரித்து இருக்க வேண்டுமே தவிர ஒன்றாக இணைத்து இருக்கக் கூடாது என்றும் இந்த வழக்கை ஒன்றாக இணைத்ததால் விசாரணைக்கு பல ஆண்டுகள் எடுக்கும் என்பதால் வழக்கை நினைத்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி இளந்திரையன், மனுவுக்கு வரும் மார்ச் 13-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தார்.

மூலக்கதை