அதிக நேரம் இயர்போனை பயன்படுத்துவதால் காதுகேளாமை பிரச்சினை - பொது சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்

சென்னை,அதிக நேரம் இயர்போனை பயன்படுத்துவதால் காதுகேளாமை பிரச்சினை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க பொது சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, பொதுசுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-"இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பெரும்பாலும் இயர்போன்கள், ஹெட்போன்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் காது கேளாமை எனப்படும் முக்கிய பிரச்சினையால் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்திய ஆராய்ச்சியின்படி, நீண்ட நேரம் மற்றும் அதிக சத்தத்துடன் ஒலி சாதனங்களை பயன்படுத்தி கேட்பதன் மூலம் செவித்திறன் இழப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது. இதில் பெரும்பாலும் இளைய தலைமுறையினரே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.நீண்ட நேரம் இயர்போன் பயன்படுத்திய பின்னர் தற்காலிகமாக செவிதிறனில் மாற்றம் ஏற்படுவதாக ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் நமது தினசரி வாழக்கையில் கவனிக்கப்படுவதில்லை. குழந்தைகள் ஆன்லைனில் விளையாடும் பழக்கம் தற்போது அதிகரித்துள்ளது. அதிக ஒலியை அடிக்கடி கேட்பதால் அவர்களின் செவித்திறன் குறையும்.வரும் முன் காப்போம் என்பதை கருத்தில் கொண்டு ஒலி சாதனங்களால் ஏற்படும் காது கேளாமையை தடுப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-* சாதாரண அளவிலான ஒலியாக இருந்தாலும் ஹெட்போனின் தேவையற்ற பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். மேலும், ஒலி சாதனங்களை 50 டெசிபல் ஒலிக்கு மேலே இல்லாமல் பயன்படுத்த வேண்டும்.* தினமும் இயர்போன் பயன்பாட்டை 2 மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒலி சாதனத்தை பயன்படுத்தும்போது அடிக்கடி இடைவேளைகள் எடுத்து கொள்ள வேண்டும்.* குறைந்த ஒலியில், அதிக இரைச்சலை தவிர்க்க கூடிய ஹெட்போன்களை பயன்படுத்த வேண்டும். மேலும், குழந்தைகள் அதிகமாக செல்போன் மற்றும் தொலைகாட்சிகள் பார்ப்பதை குறைக்க வேண்டும். ஏனெனில் இது மூளை வளர்ச்சியில் தாமதத்தை ஏற்படுத்தும்.* குழந்தைகள் ஆன்லைனில் விளையாடும் நேரத்தை குறைப்பதன் மூலம் அவர்கள் காது அதிக சத்தத்திற்கு உட்படுவதை தவிர்க்க முடியும். மேலும், இளைஞர்கள் சமூக ஊடகங்களில் செலவிடும் நேரத்தை குறைத்து குடும்ப உறுப்பினர்களிடம் செலவிடும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்.* பொது இடங்களில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவர்கள் சராசரி ஒலி 100 டெசிபலுக்கு அதிகமாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்யவேண்டும். காது கேட்கும் திறன் பரிசோதனைகளை செய்து கொள்வதன் மூலம் உரிய நேரத்தில் சிகிச்சையை மேற்கொண்டு செவித்திறன் இழப்பை தவிர்க்க முடியும்.காது கேட்கும் திறன் முற்றிலும் பாதிக்கப்படும்போது, காது கேட்க உதவி கருவிகள் மூலம் கேட்கும் திறனை மீண்டும் பெற இயலாது. மேலும், நிரந்தர காது இரைச்சல் சிறு வயதிலேயே தொடர்ந்தால் மன அழுத்தம் உள்பட பல மனரீதியிலான பாதிப்புகளை ஏற்படுத்தும்."இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூலக்கதை
