மகளிர் பிரீமியர் லீக்; உ.பி.வாரியர்ஸ் அணியிடம் தோல்வி... லீக் சுற்றுடன் வெளியேறிய ஆர்.சி.பி

  தினத்தந்தி
மகளிர் பிரீமியர் லீக்; உ.பி.வாரியர்ஸ் அணியிடம் தோல்வி... லீக் சுற்றுடன் வெளியேறிய ஆர்.சி.பி

லக்னோ,5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்றிரவு லக்னோவில் நடநத 18-வது லீக் ஆட்டத்தில் உ.பி.வாரியர்ஸ் - பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பெங்களூரு முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி அதிரடியாக விளையாடியது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 225 ரன்கள் குவித்தது. உ.பி.வாரியர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜார்ஜியா வால் 99* ரன்கள் எடுத்தார். பெங்களூர் தரப்பில் ஜார்ஜியா வரேஹம் 2 விக்கெட் வீழ்த்தினார்.தொடர்ந்து 226 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த பெங்களூரு 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 12 ரன் வித்தியாசத்தில் உ. பி. வாரியர்ஸ் திரில் வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 69 ரன் எடுத்தார். உ.பி.வாரியர்ஸ் தரப்பில் எக்லெஸ்டோன், தீப்தி சர்மா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட நடப்பு சாம்பியன் ஆர்.சி.பி. லீக் சுற்றுடன் நடையை கட்டியது. இந்த சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.உ.பி.வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறி உள்ளன. இந்த தொடரில் இன்று ஓய்வு நாளாகும். இதையடுத்து தொடரின் கடைசி கட்ட (2 லீக் + பிளே ஆப்) ஆட்டங்கள் மும்பையில் நாளை தொடங்குகிறது.

மூலக்கதை