மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் மீது உரிமை மீறல் நோட்டீஸ்

புதுடெல்லி, 2025-2026-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த மாதம் (பிப்ரவரி) 1-ந் தேதி நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில், 13-ந் தேதி வரை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முதல் அமர்வில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் மும்மொழி கொள்கைக்கு தி.மு.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அது தொடர்பாக, தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதற்கு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ஆவேசமாக பதில் அளித்தார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, "பி.எம். ஸ்ரீ திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் ஏற்றுக்கொண்டார். ஆனால், அதன் பிறகு ஒரு சூப்பர் முதல்-அமைச்சர் நிலைப்பாட்டை மாற்றி உள்ளார். பி.எம். ஸ்ரீ திட்டத்தை நிராகரிக்கும் முடிவை எடுத்த தமிழ்நாட்டின் சூப்பர் முதல்-அமைச்சர் யார்?" என்ற கேள்வியை முன்வைத்தார். மேலும் பா.ஜ.க. ஆளாத மாநிலங்களான கர்நாடகா, இமாச்சல பிரதேசத்திலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை, தி.மு.க. தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது. தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்" என்று தெரிவித்தார்இதற்கு தி.மு.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மக்களவையில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் எம்.பி. கனிமொழியிடம் தெரிவித்தார்.இந்நிலையில் நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் மீது தி.மு.க. எம்.பி. கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார். இதுதொடர்பான அந்த நோட்டீசில் கூறியிருப்பதாவது:-,"மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் மக்களவையில் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி தொடர்பாக பதிலளிக்கும்போது, மும்மொழி கொள்கையை தமிழ்நாடு அரசு முதலில் ஏற்றுக்கொண்டதாகவும் அதன் பின்னர் நிலைப்பாட்டை மாற்றி கொண்டதாகவும் தெரிவித்தார். இந்த கூற்று தவறானது, மக்களவையை தவறாக வழிநடத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்துள்ளார்.மேலும் அவர் பேசும்போது, நகாரீகமற்ற, ஜனநாயகத்துக்கு புறம்பான,நேர்மையற்ற முறையில் நடந்துகொள்கிறார்கள் என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து பேசி உள்ளார். இது தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயல் ஆகும். எனவே மக்களவையை தவறாக வழிநடத்தியதற்காகவும் அவையை அவமதித்ததற்காகவும் மக்களவை விதி 223ன் கீழ் மத்திய கல்வி மந்திரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்"இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலக்கதை
