நீலகிரியில் பொக்காபுரம் மாரியம்மன் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

நீலகிரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக கூடலூர் அருகே உள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வருடாந்திர தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கேரளா, கர்நாடக உள்பட வெளி மாநிலங்கள் மட்டுமின்றி கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருத்தேர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.கடந்த 07-03-2025 அன்று பொக்காபுரம் மாரியம்மன் கோவில் விழா தொடங்கியது. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மன் பூ கரகம் எடுத்து முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இந்நிலையில் நேற்று (10-03-2025) இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சிம்ம வாகனத்தில் நீல நிற பட்டு சேலை அணிந்து மாரியம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருத்தேரை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை இழுத்து அம்மனை தரிசித்தனர். முன்னதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஊட்டி, கூடலூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இரவு பகலாக இயக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை, பக்தர்கள் செய்திருந்தனர்.
மூலக்கதை
